கள்ளக்குறிச்சியில் இயங்கிவரும் தனியார் பள்ளியின் விடுதியில் தங்கிப் படித்துவந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கும் நிலையில், தங்கள் மகள் கொலை செய்யப்பட்டிருப்பதாகக் குற்றம் சுமத்துகின்றனர் மாணவியின் பெற்றோர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், அந்தப் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோருக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்தது பள்ளி நிர்வாகம்.

சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல்

தகவலறிந்து கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்குச் சென்ற மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் அவரின் சடலத்தைப் பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளில் இதேபோல ஆறு மாணவிகள் உயிரிழந்திருப்பதாகக் குற்றம் சுமத்திய மாணவியின் உறவினர்கள், மாணவியின் தற்கொலைக்குக் காரணமாக பள்ளி நிர்வாகத்தின் மீதும், ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தி பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனால் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது குவிந்த போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதற்கிடையில் மாணவி எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் கடிதத்தில், படிக்கச் சொல்லி ஆசிரியர்கள் அழுத்தம் கொடுத்ததாலேயே இந்த முடிவை எடுத்திருக்கின்றோம் எனத் தெரிவித்தது போலீஸ். அந்தக் கடிதத்தின் அடிப்படையில் கணித ஆசிரியர் வசந்த், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா இருவரையும் கைதுசெய்ததாகத் தெரிவித்தது போலீஸ். ஆனால் தங்கள் மகள் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கான நீதி கிடைக்கும் வரை மாணவியின் பெற்றோரும், உறவினர்களும் உடலை வாங்க மறுத்து வருகின்றனர். இதற்கிடையில் மாணவியின் தாய் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவிவருகிறது.

உங்க பொண்ணு செத்துதான் ஹாஸ்பிடலுக்கு வந்துச்சு

“என் பொண்ணை சின்னசேலம் கனியாமூர் பள்ளிக்கூடத்தில் 6-வது வகுப்பில் சேர்த்தேன். போன வருஷம் அவள் 11-வது படிக்கும்போதே பள்ளியில் டி.சி கேட்டேன். அவங்க கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. 12-ம் வகுப்புக்குப் போனதும் ஜூலை 1-ம் தேதி அந்தப் பள்ளிக்கூட ஹாஸ்டலில் சேர்த்தேன். ஜூலை 13-ம் தேதி காலை 6:30 மணிக்கு ’உங்க பொண்ணு உயிரோடதான் இருக்கா, உடனே கள்ளக்குறிச்சி ஹாஸ்பிடலுக்கு வாங்க’னு எனக்கு போன் வந்தது. அடுத்த அரை மணி நேரத்துல மறுபடியும் எனக்கு போன் பண்ணி உங்க பொண்ணு செத்துடுச்சுன்னு சொன்னாங்க. உடனே நாங்க கள்ளக்குறிச்சி ஹாஸ்பிடலுக்குப் போனோம். அங்கே ‘உங்க பொண்ணு செத்துதான் ஹாஸ்பிடலுக்கு வந்துச்சு’னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. அம்புட்டும் பொய்” என்றார்.

ஏழு கொலைகளை பண்ணிட்டு ஒரு பள்ளிக்கூடத்தை ஏன் நடத்தணும்?

தொடர்ந்து அந்த வீடியோவில் பேசும் மாணிவியின் தாய், “எங்க புள்ளையைப் பார்த்தோம். தலையெல்லாம் ரத்தம். அவ சட்டையை எடுத்துப் பார்த்தால் சரியான காயம். மூணாவது மாடியில இருந்து விழுந்த புள்ளையோட முகம், கை, காலெல்லாம் நல்லா இருக்கும்போது சட்டைக்குள்ள மட்டும் எப்படி அவ்ளோ காயம் வரும்… உடனே அவ குதிச்சதா சொன்ன இடத்துக்குப் போய்ப் பார்த்தோம். அங்க ஒரு சொட்டு ரத்தம்கூட இல்லை. அந்தப் பள்ளிக்கூடத்தின் வார்டனோ, பிரின்ஸ்சிபாலோ யாரும் எங்களை சந்திக்கலைங்க. மறுபடியும் ஹாஸ்பிட்டலுக்கு போறதுக்குள்ள 1,000 போலீஸை நிறுத்திவெச்சுருக்காங்க. அங்கே இருந்த எல்லாரும் என் புள்ளையோட சேர்த்து இது 7-வது கொலைன்னு சொல்றாங்க. அத்தனை பேரையும் கொலை பண்ணிட்டு, அதை மறைச்சு, பணத்தால அடிச்சு பள்ளிக்கூடத்தை நடத்திக்கிட்டு வர்றாங்க. ஏழு கொலைகளை பண்ணிட்டு ஒரு பள்ளிக்கூடத்தை ஏன் நடத்தணும்.

என் புள்ளையோட முடியட்டும்…

ஆனாலும் எங்க புள்ளையோட இது முடிவுக்கு வரட்டும்னு போராட்டம் பண்ணினோம். ஆனா ஒரு கோடி ரூபாய் பணத்தை யாருக்கு லஞ்சமா கொடுத்தாங்களோ தெரியலை. 200 போலீஸ்காரங்களை விட்டு எங்களை நாயை அடிக்கற மாதிரி அடிச்சு துரத்திட்டாங்க. பள்ளி நிர்வாகத்தையும், பிரின்சிபாலையும் கைது பண்ணிட்டோம்னு எங்ககிட்ட போலீஸ்காரங்க போட்டோவைக் காட்டினாங்க. ஆனா கைது பண்ணவங்களை காட்டுங்கனு நாங்க ஸ்டேஷனுக்குப் போய் பார்த்தப்போ அங்கே யாருமே இல்லை. சிசிடிவி வீடியோவை முழுசா காட்டுங்கன்னு கேட்டோம். ஆனா ஒரு வீடியோவைக்கூட எங்ககிட்ட காட்டலை. அதிலும் பொய்.

கூட படிச்ச பிள்ளைங்கக்கிட்ட கூட பேச விட மாட்டிக்காங்க

என் புள்ளைகூட தங்கிப் படிச்ச புள்ளைங்ககிட்ட பேசறதுக்கு அனுமதி கேட்டோம். அதுக்கும் பள்ளி நிர்வாகம் அனுமதிக்கலை. எங்க முன்னாடியும், போலீஸ் முன்னாடியும்தான் என் புள்ளையோட பையைப் பார்க்கணும். ஆனால் இவங்க மட்டும் தனியா போய் என் புள்ளையோட பையைப் பார்த்து, அதில் ஒரு சீட்டை எழுதிவெச்சுட்டு ‘உன் பொண்ணு சீட்டு எழுதிவெச்சுட்டு செத்துடுச்சு’ன்னு அபாண்டமா ஒரு பொய்யைச் சொல்றாங்க. என் புள்ளை விழுந்துடுச்சுனு ஜூலை 13-ம் தேதி காலையில் 6:30 மணிக்கு எனக்கு போன் பண்றாங்க. ஆனா 12-ம் தேதி இரவு 10:30 மணிக்கே உன் புள்ளை கீழே விழுந்துடுச்சுனு சொல்றாங்க.

ஏன் யாருக்கும் தகவல் சொல்லல…

இது எந்த ஊர் நியாயம்… கீழே விழுந்த புள்ளையை முறைப்படி ஆம்புலன்ஸில் அழைச்சுக்கிட்டு போகணும். ஆனா அவங்க அப்படிப் பண்ணலை. அடுத்து போலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கணும். அதையும் அவங்க செய்யலை. இப்படி ஒரு திருட்டுப் பள்ளிக்கூடத்தை எங்கேயும் நான் பார்த்ததில்லை. என் புள்ளை எத்தனை மணிக்கு செத்துச்சோ தெரியலை. ஆனா என் புள்ளை உடம்பு விறைச்சுப் போய் கெடக்குது. போலீஸோ, அரசியல்வாதிகளோ ஒருத்தர்கூட எங்களுக்காகப் பேசலை. காலையில் 6:30 மணியில இருந்து இரவு 10 மணி வரைக்கும் போராடிப் பார்த்தோம். ஆனா அந்தப் பள்ளிக்கூடம்தான் ஜெயிச்சுது. என் புள்ளை சாவுக்கு நியாயம் வேணும். அந்தப் பள்ளிக்கூடத்தை இழுத்து மூடணும். இனிமே அதைத் திறக்கவே கூடாது” என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் மாணவியின் உடலை வாங்க மறுத்து நேற்று இரண்டாவது நாளாக போராட்டம் நடத்திவரும் நிலையில், டி.டி.வி.தினகரன், சீமான் உள்ளிட்டவர்கள் மாணவியின் மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கின்றனர். அதேசமயம் மாணவியின் மர்ம மரணத்தை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்றும், உடலை மறு உடல் கூராய்வுக்கு உட்படுத்த வேண்டுமென்றும் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்கின்றனர் மாணவியின் (ஸ்ரீமதி) பெற்றோர்.

இந்நிலையில் மாணவி உயிரிழந்த வழக்கில், அந்தப் பள்ளியின் வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா மற்றும் கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்

உயிரிழந்த மாணவியின் தாயார் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் இரண்டு ஆசிரியர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மாணவியை திட்டியதாக புகார் எழுந்துள்ளது.பள்ளியின் தாளாளர், செயலாளர் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Anniyans Srimathi death case suicide letter before she died

ஆசிரியர்கள் துன்புறுத்தல் – கள்ளக்குறிச்சி மாணவி எழுதிய கடிதம் வெளியானது

வழக்கு பல்வேறு திருப்பங்களை அடைந்திருக்கும் இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலைக்கு முன்பு எழுதியதாக கடிதம் ஒன்றை போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர். அதில், தன்னை வேதியியல் துறை ஆசிரியர் ஹரிப்பிரியா மற்றும் கணித ஆசிரியர் கீர்த்திகா என இருவரும் தொல்லை கொடுத்ததாகவும், தான் நன்றாக படித்த போதிலும் அவர்கள் படிக்கவில்லை என கூறி அந்த இரு ஆசிரியர்களும் தன்னை துன்புறுத்தியதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் சரியாக படிப்பதில்லை என மற்ற ஆசிரியர்களிடம் அவதூறு பரப்பியதாகவும் மாணவி குற்றம்சாட்டியுள்ளார். தாய், தந்தைக்கு சாரி என்று சொல்லி அவர் அந்த கடிதத்தை முடித்துள்ளார். இந்த கடிதத்தின் அடிப்படையில் தான் பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா மற்றும் கணித ஆசிரியை கீர்த்திகாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி உடல் இன்று நல்லடக்கம்: வெளியூர் ஆட்கள் பங்கேற்க தடை… போலீஸ் குவிப்பு

மாணவியின் சொந்த ஊரான, பெரிய நசலூர் கிராமத்தில் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று நடைபெற உள்ள மாணவியின் இறுதி சடங்கில் வெளியூர் ஆட்கள் பங்கேற்க கூடாது என, மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூரில் போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்தனர்.

கனியாமூர் பள்ளி மாணவியின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், மாணவியின் இறுதி ஊர்வலத்தில் வெளியூர் மக்கள் யாரும் பங்கேற்க கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். மாணவியின் உடலை மறுகூராய்வு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் தாங்கள் கூறும் மருத்துவர் குழுவில் இடம்பெற வேண்டும் என்ற பெற்றோரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாணவியின் உடல் மறுகூராய்வு செய்யப்பட்டது. இதில் பெற்றோர் தரப்பில் யரும் கலந்துக்கொள்ளவில்லை. மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர், உறவினர் தரப்பில் யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை. இதனையடுத்து போலீஸார் மாணவியின் வீட்டிற்கு சென்று உடலை பெற்றுக்கொள்ளுமாறு நோட்டீஸ் ஒட்டினர்

 

Anniyans Kallakurichi srimathi death funeral

நல்லடக்கம்:

Anniyans Kallakurichisrimathi body buried with honor

பாடப் புத்தகத்துடன் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது – ஊர் மக்கள், உறவினர்கள் கண்ணீர் மல்க வழி அனுப்பினர்.