அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் மீண்டும் வலுப்பெறத் தொடங்கியதை அடுத்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் 2 தரப்பாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக, தங்கள் பலத்தை காட்டுவதற்காக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தத்தம் தங்கள் ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இதில் மொத்தம் உள்ள 75 மாவட்டச் செயலாளர்களில் 68-க்கும் மேற்பட்டோர் ஈபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்த நிலையில் ஓபிஎஸ்-க்கு 6 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு மட்டுமே இருந்தது.

இந்த சூழலில், அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது. புதிய தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றக் கூடாது என்று உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே தங்கள் ஆதரவாளர்களின் புடைசூழ வந்திருந்தனர். இருதரப்பினரிடையே மோதல் வெடிக்கக்கூடும் என்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்தப் பொதுக்குழுவில் ஓபிஎஸ்-க்கு எதிராக ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பினர். இருந்தபோதிலும், ஓபிஎஸ் அமைதியாக மேடையில் அமர்ந்திருந்தார்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் , “அதிமுவில் இரட்டை தலைமையை நிராகரித்துவிட்டு ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஓபிஎஸ்-ம், அவரது ஆதரவாளர்களும் கூட்டத்தை விட்டு வெளியேறினர். இதனைத் தொடர்ந்து, அடுத்த பொதுக்குழுவை ஜூலை 11-ம் தேதி கூட்டுவது என்றும், அந்தக் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஓபிஎஸ் மனு

இந்த நிலையில், இந்த பொதுக்குழுவை கூட்ட தடைவிதிக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “கட்சியின் ஒருங்கிணைப்பாளரான என்னை ஆலோசிக்காமல் ஜூலை 11-பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது கட்சி விதிகளுக்கு எதிரானது. எனவே, இந்த பொதுக்குழுவை கூட்ட தடை விதிக்க வேண்டும்” என்று ஓபிஎஸ் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.